Sunday, April 17, 2005

படிச்சுட்டு முடிஞ்சா சிரிங்க - 4

அவசரப்படேல்!

ஒரு கடைநிலை மேலாளர், இடைநிலை மேலாளர் மற்றும் உயர் மேலாளர் ஆகிய மூவரும் ஓர் அலுவல் குறித்த முக்கிய சந்திப்புக்காக அவசரமாக சென்று கொண்டிருக்கும்போது, வழியில் ஓர் அதிசய விளக்கை பார்க்கின்றனர்.

அம்மாய விளக்கை எடுத்து தேய்த்தவுடன், ஒரு பூதம் அவர்கள் முன் தோன்றி, "நான் சாதாரணமாக ஒருவருக்கு மூன்று வரங்கள் தருவேன்! இங்கு நீங்கள் மூவர் இருப்பதால், ஆளுக்கொரு வரம் தருகிறேன்! கேளுங்கள்" என்றது.

இடைநிலை மேலாளர் முந்திக் கொண்டு, "நான் இப்பொழுதே பஹாமாஸ் அருகே உள்ள கடலில், ஒரு விசைப்படகில், எந்தவித கவலையுமின்றி பயணிக்க வேண்டும்!" என்றவுடன், பூதத்தின் அருளால், அவர் அவ்விடத்திலிருந்து மாயமாய் மறைந்து போனார்!

உடனே பொறுமையை இழந்த கடைநிலை மேலாளர், "நான் மியாமி கடற்கரையில், குறைவில்லா உணவு, மது வகைகளுடன் அழகிய பெண்கள் சூழ உல்லாசமாய் பொழுதை கழிக்க விரும்புகிறேன்!" என்றவுடன், அவரும் பூத அருளால் காணாமல் போனார்!

அதுவரை பொறுமையாய் இருந்த உயர் மேலாளர், பூதத்திடம் (தன் விருப்பமாக) அமைதியாகக் கூறினார், " அந்த இரு முட்டாள்களும், மதிய உணவிற்குப் பிறகு சரியாக 1 மணிக்கு அலுவலகத்தில் இருந்தாக வேண்டும்!"

பாடம்: எப்போதும், உங்கள் மேலாளரை முதலில் பேச விடுவது சாலச் சிறந்தது!

****************************************

ஒரு மேலாளரின் பரிந்துரைக் கடிதம்

உயர் மென்பொருள் பொறியாளராக பணி புரியும் திரு.நாராயணன், எப்போதும்,

கடுமையாக உழைப்பவர். அவர் திறமையாக தனித்து செயல்படுவதோடு,

சக பணியாளர்களிடம் வம்பு பேசி நேரத்தை வீணாக்குவதை

விரும்புவதில்லை. அதற்கு நேர்மாறாக, பணியில் மற்றவருக்கு உதவுவதையே

பழக்கமாக கொண்டவர். அவர், கொடுத்த வேலையை நேரத்தில் முடிப்பதில்

மிகுந்த அக்கறை செலுத்துபவர்! அவர் பல சமயங்களில் மதிய உணவில் கூட

கவனம் செலுத்துவதில்லை! அவரிடம் அறவே இல்லாததாக நான் நினைப்பது

தலைக்கனமும் அரட்டையும்! பணியில் நிறைய சாதித்த அவரிடம் மிகுந்திருப்பது

வேலை சம்மந்தப்பட்ட நுண்ணறிவே. எனவே, திரு.நாராயணனை

நிறுவனத்தின் முக்கியப் பணியாளராகக் கருதி, அதிக வேலைச் சுமையிலிருந்து

நிரந்தரமாக விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும், அவரை

பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கிறேன். அதை விடுத்து அவரை இதே பதவியில்,

பணியில் வைத்திருப்பது நல்லதல்ல என்று உறுதியாகக் கூறுகிறேன்!

சிறிது நேரத்திற்குப் பிறகு அதே மேலாளர் அந்த நிறுவனத்தின் மனித மேம்பாட்டுத் துறைக்கு ஒரு சிறு குறிப்பை அனுப்பி வைத்தார்.

"நான், இன்று காலை, உங்களுக்கு அனுப்பிய பரிந்துரைக் கடிதத்தை எழுதும்போது, அந்த அறிவிலி நாராயணன் என் அருகில் தான் இருந்தான்! எனவே, அக்கடிதத்தின் ஒற்றைப்படை வரிகளை மட்டுமே படித்து, நாராயணனைப் பற்றிய எனது கணிப்பை அறியவும் !!!!! நன்றி!

என்றென்றும் அன்புடன்
பாலா

1 மறுமொழிகள்:

said...

உயர் மென்பொருள் பொறியாளராக பணி புரியும் திரு.நாராயணன், எப்போதும்,
சக பணியாளர்களிடம் வம்பு பேசி நேரத்தை வீணாக்குவதை
பழக்கமாக கொண்டவர். அவர், கொடுத்த வேலையை நேரத்தில் முடிப்பதில்
கவனம் செலுத்துவதில்லை! அவரிடம் அறவே இல்லாததாக நான் நினைப்பது
வேலை சம்மந்தப்பட்ட நுண்ணறிவே. எனவே, திரு.நாராயணனை
நிரந்தரமாக விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும், அவரை
பணியில் வைத்திருப்பது நல்லதல்ல என்று உறுதியாகக் கூறுகிறேன்!

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails